அம்பத்தூர் அடுத்த மேனாம்பேடு பகுதியை சேர்ந்தவர் யோகேஷ் (வயது41). இவரது மனைவி வைஷ்ணவி. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. யோகேஷ் கொரட்டூரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராகவும் இருந்து வந்தார்.
இந்தநிலையில் அடுத்த மாதம் சென்னையில் ஆணழகன் போட்டி ஒன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க யோகேஷ் திட்டமிட்டு இருந்தார். இதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். நேற்று மாலை யோகேஷ் ஜிம்மிற்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு பயிற்சி அளித்துவிட்டு அவரும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார்.
அப்போது அவரது உடலில் கடும் சோர்வு ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து யோகேஷ், அருகில் இருந்தவர்களிடம் குளியல் அறைக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பயிற்சிக்கு வந்தவர்கள் கதவை உடைத்து பார்த்த போது கீழே மயங்கிய நிலையில் யோகேஷ் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
யோகேஷ் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் மிகவும் சோர்வு அடைந்து உள்ளார். பின்னர் அவர் குளியல் அறைக்கு சென்று குளித்ததாக தெரிகிறது. அப்போது அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருப்பது தெரியவந்து உள்ளது.
இறந்து போன யோகேஷ் கடந்த 2021-ம் ஆண்டு ஆணழகன் பட்டம் பெற்று உள்ளார். மேலும் கடந்த ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டமும்பெற்று இருக்கிறார். இதன்பின்னர் அவர் தீவிர உடற்பயிற்சி செய்யாமல் போட்டியிலும் பங்கேற்காமல் இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே விரைவில் நடைபெற உள்ள ஒரு ஆணழகன் கடுமையான போட்டியில் பங்கேற்பதற்காக யோகேஷ் மீண்டும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
வழக்கம்போல் நேற்று உடற்பயிற்சியில் ஈடுபட்டபோது அவர் மாரடைப்பால் இறந்து போனார். இச்சம்பவம் அவரிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக இளம் வயதினர் மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் சம்பவம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து யோகேஷின் இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்க என்று விசாரணை செய்து வருகிறார்கள்.