Home NEWS தமிழகத்தில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றிய மர்ம ஆசாமிகள்..!! பின்னணி...

தமிழகத்தில் பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றிய மர்ம ஆசாமிகள்..!! பின்னணி என்ன..?

கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது சில மர்ம நபர்கள் காவி பெயிண்ட் ஊற்றி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் கந்தசஷ்டி கவசத்தில் வரும் வரிகள் குறித்து அருவருக்கத்தக்க யூடியூப் சேனல் ஒன்று வீடியோவை வெளியிட்டது. இதனால் பாஜக உள்ளிட்ட பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதன்பிறகு அந்த கருப்பர் கூட்டத்தில் சேனல் தொகுப்பாளர் சுரேந்தர் காவல்துறையிடம் சரணடைந்தார். அடுத்து தற்போது கோயம்புத்தூரில் உள்ள சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது காவி நிற பெயிண்ட் ஊற்றப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் இந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரியார் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிட கழகத்தினர் பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முன்பு சில தடவை பெரியார் மீது இதுபோன்ற கரை படிந்துள்ளது, கடந்த ஜனவரி துக்ளக் வார இதழ் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் கடவுள் ராமரின் சிலை நிர்வாணமாக கொண்டுவரப்பட்டு செருப்பால் அடிக்க பட்டது என்று பேசியிருந்தார். இந்த சம்பவம் குறித்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது, அந்த சம்பவத்தை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலையின் தலை மற்றும் கை பகுதி உடைக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்வுக்கு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் பெரிதும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டு இருந்தது. இது தமிழகம் முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பெரியார் உருவ சிலைகள் அவமதிக்கப்படுவது குறித்து பல கண்டன ஆர்பாட்டங்கள் ஏற்பட்டு வருகின்றன.

Exit mobile version