Home NEWS ஓடும் அரசு பேருந்தில் உடைந்து விழுந்த படிக்கட்டு…!!! நூலிழையில் உயிர் தப்பிய மாணவர்கள்.. அதிர்ச்சியில் பயணிகள்.

ஓடும் அரசு பேருந்தில் உடைந்து விழுந்த படிக்கட்டு…!!! நூலிழையில் உயிர் தப்பிய மாணவர்கள்.. அதிர்ச்சியில் பயணிகள்.

TNSTC

மயிலாடுதுறையில் பயணிகளுடன் சென்ற அரசு பஸ் பின்பக்க படிக்கட்டு உடைந்து விழுந்தது. பஸ் மெதுவாகச் சென்றதால் கல்லூரி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டில் இருந்து 27 ஏ என்ற எண்ணுடன் அரசு பஸ் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று காலை பொறையார் நோக்கி சென்றது.

பஸ்ஸில் 90 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததால் நிற்க இடமில்லாமல் படிக்கட்டுகளில் கல்லூரி மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அதிகமாக பயணிகள் இருந்ததால் பஸ்சை டிரைவர் மெதுவாக இயக்கியுள்ளார். இந்நிலையில் மயிலாடுதுறை பெரிய மாரியம்மன் கோவில் அருகே பஸ் சென்றபோது பின்பக்க படிக்கட்டு திடீரென உடைந்து விழுந்தது.

படியில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் பஸ்சில் இருந்து குதித்து இறங்கியதால் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். படிக்கட்டு உடைந்தது தெரியாமல் பஸ் தொடர்ந்து சென்றதால் மாணவர்கள் கூச்சலிட்டு பஸ்சை நிறுத்தினர்.படிக்கட்டு உடைந்ததை அறிந்த கண்டக்டர் இறங்கி சென்று ரோட்டில் கிடந்த படிக்கட்டை எடுத்து வந்ததும் பஸ் மீண்டும் புறப்பட்டு சென்றது. பயணத்தை தொடர்ந்த அந்த பஸ்சில் பயணிகள் அச்சத்துடன் பயணித்தனர்.

மயிலாடுதுறை பகுதியில் காலை மாலை நேரங்களில் மாணவர்கள் பஸ்சில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பயணிக்கும் மாணவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைவதும் தொடர்கதையாக உள்ளது கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும்.மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பணிமனையில் உள்ள பஸ்களை உரிய முறையில் ஆய்வு செய்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Exit mobile version