Home NEWS கொரோனா நோயாளி என்று ஆம்புலன்ஸ் இல்லாமல் இறந்த தாயை பைக்கிலேயே சொந்த ஊருக்கு கொண்டு சென்ற...

கொரோனா நோயாளி என்று ஆம்புலன்ஸ் இல்லாமல் இறந்த தாயை பைக்கிலேயே சொந்த ஊருக்கு கொண்டு சென்ற மகன்… விபரம் உள்ளே

உடல்நலக் குறைவால் இறந்த பெண்ணின் சடலத்தை கொரோனா அச்சத்தால் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஏற்ற மறுத்தனர். அதனால் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் தாயின் உடலை எடுத்து செல்லும் அவலநிலை ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கீல்லோய் கிராமத்தை சேர்ந்தவர் செஞ்சுலம்மா(50). இவர் நேற்று முன்தினம் திடீரென்று உடல் நலக்குறைவால் மயக்கமடைந்தார். உடனடியாக அவரது மகன் தன் நண்பருடன் அம்மாவை இருசக்கர வாகனத்தில் லாசாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள மருத்துவர்கள் செஞ்சுலம்மாவை பரிசோதனை செய்த பின்பு அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து உடலை தனது சொந்த ஊரான கீல்லோய் கிராமத்திற்கு கொண்டு வர எண்ணி அங்குள்ள தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் கேட்டார்.

ஆனால் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கொரோனா அச்சத்தால் சடலத்தை எடுத்துச் செல்ல முன்வரவில்லை. மேலும் தனது தாய்க்கு கொரோனா இல்லை என்று ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சடலத்தை ஏற்ற ஒப்புக்கொள்ளவில்லை.

அந்த சூழ்நிலையில் செய்வதறியாது தவித்த மகன் தன் நண்பனை பைக் ஓட்டும்படி கூறிவிட்டு பைக்கிலேயே தனது தாயின் சடலத்தை உட்கார்ந்த நிலையில் வைத்துக் கொண்டு தாயின் சடலத்திற்கு மாஸ்க் அணிவித்து சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார். இந்த சம்பவத்தை மருத்துவமனையில் உள்ள போலீசாரும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக உள்ளது

Exit mobile version