Home NEWS சாலை வசதி இல்லாததால் நிறைமாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கிவந்து மருத்துவமனைக்கு செல்லும் முன்பே ஆட்டோவிலேயே...

சாலை வசதி இல்லாததால் நிறைமாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கிவந்து மருத்துவமனைக்கு செல்லும் முன்பே ஆட்டோவிலேயே பிறந்த ஆண்குழந்தை…!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஊசூர் அருகே குருமலை, நச்சுமேடு, வெள்ளக்கல் மலை உள்ளிட்ட மூன்று மலை கிராமங்கள், குக்கிராமங்கள் உள்ளன. இங்கு வசித்து வரும் மக்கள் இதுவரை தார்சாலை வசதி இல்லாமல் அடிவாரத்திற்கு வரவும் மீண்டும் மலைக்கு செல்லவும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நத்தமேடு மலை கிராமத்தை சேர்ந்த பவுனு ஏற்கனவே இரு ஆண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருந்தார். நிறைமாத கர்ப்பிணி ஆன அவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

மலைகிராம மக்கள் பிரசவம் பார்க்க முயன்று உள்ளனர். ஆனால் நேற்று காலை வரை பிரசவிக்க முடியாமல் வலியால் அவர் அலறியதால் அடிவாரத்திலுள்ள ஊசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். அதற்காக கரடுமுரடான சாலையில் குருமலையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கர்ப்பிணியை உறவினர்களே டோலி கட்டி தோளில் மீது சுமந்தபடி தூக்கி வந்தனர். மலை அடிவாரத்தில் இருந்து ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அவருக்கு ஆட்டோவிலேயே ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மலை அடிவாரத்தில் மண் சாலையில் காத்திருந்த ஆம்புலன்ஸ் தாய் மற்றும் சேய்க்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

தொடர்ந்து ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருவரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குருமலை மலைகிராம மக்கள் கூறுகையில்: அடிவாரத்தில் இருந்து குருமலைக்கு தார் சாலை அமைக்க 1.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும் தார்சாலை போடப்படவில்லை. தார்சாலை போடுவதற்காக ஜல்லி கொட்டி அப்படியே அரைகுறையாக விட்டுவிட்டனர். இனியாவது எங்களுக்கு தார் சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Exit mobile version