Home NEWS முதல்வரிடம் விருது பெற்ற தாசில்தார், மகிழ்ச்சியில் பிரியாணி விருந்து வைத்ததால் வந்த வினை…!

முதல்வரிடம் விருது பெற்ற தாசில்தார், மகிழ்ச்சியில் பிரியாணி விருந்து வைத்ததால் வந்த வினை…!

குன்றத்தூர் புதிய தாலுகாவாக பிரிக்கப்பட்டு குன்றத்தூரில் புதிய தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார் ஜெயசித்ரா. இவருக்கு கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா அன்று முதலமைச்சரின் கையால் கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறப்பு விருது கிடைத்துள்ளது. இந்த சிறப்பு விருது கிடைத்ததற்காக, விருது பெற்றதை கொண்டாடும் விதமாக செம்பரபாக்கம் அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சக ஊழியர்களுக்கு பிரியாணி விருந்து வைத்துள்ளார் ஜெயசித்ரா.

இதில் குன்றத்தூர் வட்டத்தில் பணியாற்றக்கூடிய துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாராட்டு விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுக்கப்பட்டது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொது மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க கூடிய இவர்களே இப்படி எந்தவித அனுமதியும் இல்லாமல் விழா நடத்தியது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாக விருது பெற்ற வட்டாட்சியர் இதுபோன்று செயலில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்தூர் வட்டாட்சியர் கடந்த மாதம் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தி அறிந்த காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா அவர்கள் ஜெய சித்ராவை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version