Home NEWS கரூரை சேர்ந்த மிட்டாய் வியாபாரியின் மகள் தமிழக கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளார்…!!!

கரூரை சேர்ந்த மிட்டாய் வியாபாரியின் மகள் தமிழக கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளார்…!!!

Selsiya

தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணியில் 23 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் வீராங்கனைகளை தேர்வு செய்யும் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.காம் சிஏ, மூன்றாமாண்டு பயின்று வரும் செல்சியா உட்பட 29 பேர் தேர்வு செய்யப்பட்டனர். செல்சியா கரூர் தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்தவர்.

இவரது தந்தை ஜான்பீட்டர் தேங்காய் மிட்டாய் வியாபாரி, தாய் கிரேசி ரெஜினா இவருக்கு கெவின் ஜோன்ஸ் என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தம்பி உள்ளார். தமிழக அணிக்கு தேர்வானது பற்றி செல்சியா கூறியதாவது: எனக்கு சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் இருந்தது. அதில் சாதிக்க வேண்டும் என நினைத்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாட ஆரம்பித்தேன். எனது தந்தையும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து உற்சாகப்படுத்தினார்.

பள்ளிகளில் மாலை நேரங்களில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டேன் தொடர்ந்து கல்லூரிக்கு சென்ற போதும் பயிற்சியை விடவில்லை. ஆசிரியர்களும் உடன் படித்த நண்பர்களும் எனக்கு ஊக்கம் அளித்து உதவினர். இதனைத் தொடர்ந்து பிரத்யேகமாக கோச் அமைத்துக் கொண்டு பயிற்சி மேற்கொண்டேன். அரவக்குறிச்சி அருகே உள்ள ஒரு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் யுவராஜ் எனக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இப்போது தமிழக அணிக்கு தேர்வாகி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் குறிப்பாக கரூர் மாவட்டத்திற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுப்பேன். பேட்டிங், கீப்பிங், பீல்டிங் ஆகியவற்றில் முழு கவனம் செலுத்தி வந்தேன். இப்போது பவுலிங்கில் பயிற்சி எடுத்து வருகிறேன். ஆல்-ரவுண்டராக நிச்சயம் கலக்க வேண்டும் என செல்சியா கூறியுள்ளார்.

Exit mobile version