Home NEWS அன்னையர் தினத்தில் கோவை ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஆனந்த் மகேந்திர….!!!

அன்னையர் தினத்தில் கோவை ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு வீடு கட்டிக்கொடுத்த ஆனந்த் மகேந்திர….!!!

mahindra

கோவை இட்லி பாட்டிக்கு அன்னையர் தினத்தில் வீடு கட்டிக் கொடுத்து அவரது கனவை ஆனந்த் மஹிந்திரா நிறைவேற்றியுள்ளார். கோவை ஆலந்துறை அடுத்து வடிவேலாம்பாளையம் சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி 85. இவர் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு கடந்த 30 வருடங்களாக விற்பனை செய்துவருகிறார். யார் உதவியும் இல்லாமல் அவரே இட்லி, சட்னி, சாம்பார் தயார் செய்வார். ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்தார்.

அதற்குப்பிறகுதான் விலையை கூட்டி உள்ளார். இட்லி சமைக்க கேஸ் அடுப்பு கிடையாது, மாவு அரைக்க கிரைண்டர் கிடையாது, சட்னி அரைக்க மிக்சி கிடையாது, எல்லாமே அடுப்பும், ஆட்டுக்கல்லும் தான். சுட சுட ஆவி பறக்க சுவையான இட்லி, சாம்பார் விடியற்காலையிலேயே தயார் செய்து விற்று வருகிறார். இவரது இந்த கை பக்குவத்துக்கு சுற்றியுள்ள பகுதியில் இருந்து பலர் வந்து செல்கிறார்கள்.

ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியின் சேவையை அறிந்த மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்துவதோடு விறகு அடுப்புக்கு மாறாக சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்ஸி ஆகியவற்றை பாட்டிக்கு வழங்கினார். இதைத்தொடர்ந்து பாரத் கேஸ் மாதம்தோறும் 2 சிலிண்டர்களையும், ஹச் பி கேஸ் ஒரு சிலிண்டரையும் வழங்கி வருகிறது.

மேலும் இட்லி பாட்டி ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புகலிடம் கடையை விரிவுபடுத்த தனக்கு ஒரு வீடு கட்டித் தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து அவரும் ஆனந்த் மகேந்திராவிடம் பாட்டியின் கனவு குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து அதை நிறைவேற்றுவதற்காக உறுதியளித்தார்.

அதன்படி 3.5 சென்ட் நிலத்தில் கமலாத்தாள் பாட்டிக்கு வீடு மற்றும் இட்லி கடை நடத்துவதற்கான கட்டுமான பணிகளை மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜனவரி 28ஆம் தேதி ரூ.7 லட்சம் செலவில் துவங்கியது. இதையடுத்து கடந்த ஐந்தாம் தேதி வீடு கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு கமலாத்தாள் பாட்டிக்கு அந்த வீட்டை பரிசாக அளித்தனர்.

இதனை மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவருக்கு சிறிது சந்தோஷம் கொடுக்கும் முயற்சியை விட வேறு ஒரு பெரிய சந்தோஷம் இல்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version