தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்திகளாக விளங்கிய திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் துருவங்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்றைய தேர்தல் முடிவுகள் ஒரு மாபெரும் புரட்சியை பறைசாற்றி வருகின்றன. திராவிட கட்சிகளிடையே அதிர்ச்சியும் எழுந்து வருகிறது.
தற்போதைக்கு தமிழக வெற்றிக் கழகம் 115 தொகுதிகளில் முன்னிலை பெற்று முதலிடத்தில் உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 75 இடங்களுடன் 2ம் இடத்திலும், ஆளுங்கட்சியான திமுக வெறும் 49 இடங்களைப் பெற்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு முழுமையாக தவெக பக்கம் சாய்ந்துள்ளதை முன்னிலை நிலவரங்கள் உறுதி செய்கின்றன. இன்று சாயங்காலம் இறுதி முடிவுகள் வெளியாகும் போது, தமிழக அரசியலில் ஒரு புதிய சூரிய உதயம் நிகழுமா அல்லது கூட்டணி ஆட்சியா என்பது தெளிவாகத் தெரியும்.










