அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது விராலிமலை தொகுதியின் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகியுள்ளார். இதனால், அதிமுக கூடாரம் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய தவெக, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்த தேர்தலில் பெருத்த தோல்வியடைந்த அதிமுக 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இதனால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் தனி அணி உருவானது. சட்டசபையில நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த அணியை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு கொடுத்தது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல…‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் இந்த நிலையில், அவர் தனது எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகியுள்ளார். விராலிமலை தொகுதியிலிருந்து போட்டியிட்ட அவர், 4ஆவது முறையாக அவர் எம்.எல்.ஏவாகத் தேர்வு செய்யப்பட்டார். இத்தகைய சூழலில் அவர் தனது எம்.எல்.ஏ. பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியிருந்தார்.
இதையடுத்து, அவரது பதவி விலகலை ஏற்பதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரும் அறிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் 6 தொகுதிகள் காலியாகி உள்ளன. இதில், விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்குத் தொகுதியும் அடங்கும். விரைவில் இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், சி.விஜயபாஸ்கர் விரைவில் தவெகவில் இணையலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பதவி விலகல் தொடர்பாக சி.விஜயபாஸ்கர், “இது முடிவல்ல… தொடக்கம்தான்” என ஆடியோ வெளியிட்டுள்ளார். இன்னொரு புறம் சமீபகாலமாக, அதிமுகவைச் சேர்ந்தவர்களே தவெகவில் அதிகளவில் இணைந்துவருகின்றனர். இதனால், அதிமுகவின் கோட்டை சரிவைக் கண்டிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.










