கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். “திமுகவும், அதிமுகவும் கூட்டுக் களவாணிகள். இரு கட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றால், அதை வரவிருக்கும் இடைத்தேர்தலில் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று அவர் சவால் விடுத்தார்.
மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் அரசியல் குற்றச்சாட்டுகளை விட செயல்பாடுகளே முக்கியம் என்றார். மேகேதாட்டு அணை பிரச்சினை, மாநில உரிமைகள் மற்றும் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விஷயங்களில் தமிழகத்தின் நலனை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் உறுதியளித்தார்.
கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தை நினைவுகூர்ந்த விஜய், அந்தச் சம்பவம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் அடுத்த தலைமுறைக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதேநேரத்தில், மாநில அரசின் செயல்பாடுகள், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல் அணுகுமுறைகள் குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார். வரவிருக்கும் இடைத்தேர்தல் அரசியல் ரீதியாக முக்கியமானதாக இருக்கும் என்றும், அதில் மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் விஜய் தெரிவித்தார்.










