டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய் இன்று தமிழகம் புறப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விஜய் சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில் அவர் நேரம் ஒதுக்காததால் விஜய் தமிழகம் திரும்பி இருக்கிறார்.
இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சந்திக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில் வேறொரு நாளில் விஜய் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று டெல்லி சென்ற விஜய் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மோடியை முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். மொத்தம் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பானது நடைபெற்றது. பிரதமர் மோடியும் விஜய்யும் சுமார் 10 நிமிடங்கள் பேசியதாகவும் தகவல் வெளியானது.
அப்போது முதல்வர் விஜய் பிரதமர் மோடியிடம் சில கோரிக்கைகளையும் அளித்துள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்சினை, தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்ம் உள்ளிட்ட கோரிக்கைகள் அளித்ததாகவும், நெதர்லாந்தில் இருந்து செப்பேடுகளை பெற்றதற்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
இதனை தொடர்ந்து நேற்று அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது நிதி சார்ந்த விஷயங்கள் குறித்து சில கோரிக்கைகளை வழங்கியதாகவும் தகவல் வெளியானது.
10, ஜன்பத்’ இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. இதனால் ’10, ஜன்பத்’ இல்லத்தின் வெளியே ராகுல் காந்தி மற்றும் முதல்வர் விஜய் ஆகியோரின் உருவப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
சோனியா காந்தி, ராகுல் காந்தியை விஜய் சந்திக்க திட்டமிட்ட நிலையில் அவரது இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. சோனியா காந்தி – ராகுலை முதல்வர் விஜய் வரும் வாரங்களில் ஏதேனும் ஒரு நாளில் சந்திக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.










