“சட்டப்பேரவை நடவடிக்கைகளின் நேரலை நிறுத்தப்பட்டது மிகப் பெரிய தவறு. அதேபோல், எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் முற்றிலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, ஆளுங்கட்சியினருக்கு வேண்டிய விவாத வீடியோக்கள் மட்டும் எடிட் செய்யப்பட்டு மாலையில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் பேச்சுரிமையை நசுக்கும் செயல், நல்லதொரு ஆக்கப்பூர்வமான சட்டப்பேரவை ஜனநாயகத்துக்கு உகந்தது இல்லை” என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் காட்டமாக குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம்: தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று முதல்வர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும் ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படுவதில்லை என்பதைத் தங்களது மேலான கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.
“கொடுத்த வாக்கைக் காப்பாற்றியுள்ளார் முதல்வர். இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும். இது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு.
வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்திற்கு இன்றைய நிகழ்வு மிகப்பெரிய எடுத்துக்காட்டு” என அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுச் சொன்ன அன்றே நேரலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. மாற்றம்’ என்ற சொல்லை மையமாக வைத்துத் தேர்தலைச் சந்தித்தவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் குரலை நசுக்குவதுதான் அவர்கள் செய்ய நினைக்கும் மாற்றமா? மக்கள் பிரதிநிதிகளின் பேச்சை மறைப்பது மக்களையே அவமானப்படுத்துவது ஆகும்.










