அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது முதலீட்டு ஆலோசகர்கள் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 3,700-க்கும் மேற்பட்ட பங்கு வர்த்தக பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளனர். இதில் பல மில்லியன் டாலர்கள் பரிமாற்றம் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த பங்கு வர்த்தகத்தை அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப, நிதி, ஏரோஸ்பேஸ் மற்றும் ஊடக நிறுவனத்தில் ட்ரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்கள் மேற்கொண்டுள்ளனர்.
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் என்விடியா, ஆரக்கிள், மைக்ரோசாஃப்ட், போயிங், காஸ்ட்கோ உள்ளிட்ட நிறுவனங்களில் சுமார் 1 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை அதிபர் ட்ரம்ப் வாங்கியுள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே அதிபர் ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ கடமைகளை வணிக நலன்களுடன் கலப்பதாக விமர்சகர்கள் குற்றச்சாட்டு வைப்பது உண்டு.
இந்த சூழலில் மூன்றே மாத காலத்தில் 3,700 பங்கு வர்த்தக பரிவர்த்தனை என்பது அந்த விமர்சனத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. தனது முதலீடு மற்றும் சொத்துகளை நிர்வகிக்கும் பணியை தனது இரண்டு மகன்களிடம் ட்ரம்ப் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப்பின் முதலீடுகள் அனைத்தும் நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. தனிப்பட்ட முறையில் வர்த்தக நிர்வாகத்தில் ட்ரம்ப் அல்லது அவரது குடும்பத்தினர் நேரடியாக முதலீட்டில் ஈடுபடுவதில்லை என ட்ரம்ப் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்










