தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ செயல்பாட்டை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளன. திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ள தங்க மோதிரங்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC) டெண்டர் வெளியிட்டுள்ளது.
டெண்டர் ஆவணங்களின்படி, சுமார் 4.41 லட்சம் ஒரு கிராம் எடையுள்ள, 22 காரட் (916 ஹால்மார்க்) தங்க மோதிரங்கள் வாங்கப்பட உள்ளன. ஒவ்வொரு மோதிரத்திலும் தரச் சான்றிதழுடன் தனித்துவமான அடையாள குறியீடும் இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் செப்டம்பர் 15 முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த மோதிரங்கள் வழங்கப்படும். திட்டத்தை சீராக செயல்படுத்தும் வகையில், கொள்முதல் மற்றும் விநியோகப் பணிகள் கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளதாக டெண்டர் விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வு செய்யப்படும் நிறுவனம் 38 மாவட்டங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு மோதிரங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விநியோகிக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
திட்டத்தின் செயல்பாட்டிற்கான நிர்வாக நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதால், விரைவில் முழுமையான அமல்படுத்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.










