முந்தைய திமுக அரசில், சட்டப்பேரவையில் கடந்த 3 ஆண்டுகளாக, அப்போதைய ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி முதலில் தேசியகீதம் பாடப்படாமல், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தார். இதையடுத்து, அவரது உரையை அப்போதைய சபாநாயகர் அப்பாவு வாசித்து அவைக்குறிப்பில் பதிவு செய்திருந்தார்.
இன்று காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவை தொடங்கியபோதும், ஆளுநர் தனது உரையாற்றியிருக்கிறார். அதுமட்டுமின்றி, அரசின் குறிப்புகளில் சிறிதளவும் மாற்றாமின்றி மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களையும் அப்படியே உரையாற்றியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கபடுகிறது. ஆங்கிலத்தில் ஆளுநர் உரையாற்றியிருக்கும் நிலையில், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் ஜே.டி.சி. பிரபாகர் வாசித்துள்ளார்.
ஆளுநர் உரையில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் எனக் குறிப்பிட்டும், ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள் எனும் அண்ணாவின் வாக்கியங்களையும் குறிப்பிட்டும் தவெகவின் காள்கை தலைவர்களின் பெயர்களை வாசித்து தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து அவர் உரையில், 1967 அண்ணா, 1977 எம்.ஜி.ஆருக்கு பின்னர் 2026 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் வரலாற்றுப் புரட்சி நடந்துள்ளது. கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் தவெக ஆட்சி அமைத்துள்ளது என பாராட்டுக்களை தெரிவித்தார்.
மேலும் அவரது உரையில், நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்படுகிறது. தமிழகத்திற்கு ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது. மத்திய நிதிப்பகிர்வில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி குறித்து அறிக்கை வெளியிடப்படும் எனினும் நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் தவெக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, இருமொழிக் கொள்கை குறித்துப் பேசிய அவர், தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை தொடரும் எனவும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் எனவும் கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் எனவும் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதை கலாசாரம் அதிகரித்துள்ளது; போதைப்பொருளை முழுமையாக ஒழிக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் இரட்டிப்பாகி, ரூ.10 லட்சம் கோடியை கடந்துள்ளது; இதனால் ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் சுமை ஒரு லட்சம் ரூபாயைக் கடந்துள்ளது; இந்துசமய அறநிலையத்துறை முழுமையாக சீரமைப்படும்.
கோயில் நிதி கோயில்களுக்கு மட்டுமே செலவு செய்யப்படும். 2031-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாறும். லஞ்ச, ஊழல் இல்லாத நேர்மையான நிர்வாகத்தை கொண்டுவருவதே இந்த அரசின் நோக்கம். 39 நிமிடங்கள் சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர், மத்திய அரசுக்கு எதிரான வாதங்களைக் கூட எந்த மாற்றமும் செய்யாமல் வாசித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.










