பாலக்கோடு அருகே செய்முறை தேர்வு முடிந்த +2 மாணவ மாணவிகள் அரசு பள்ளி வகுப்பறையில் இருந்த பெஞ்ச், டெஸ்குகளை அடித்து உடைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அமானி மல்லாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை 700 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளியில் கடந்த ஒரு வாரமாக 12ம் வகுப்பு செய்முறை தேர்வு நடந்தது. இது நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. தேர்வு முடிந்து வீட்டிற்கு செல்லும் முன்பாக வகுப்பறையில் இருந்த பென்ச், டெஸ்க், மின்விசிறி மற்றும் ஸ்விட்ச் பாக்ஸ் உள்ளிட்டவற்றை பிளஸ் 2 மாணவ மாணவிகள் அடித்து உடைத்து நொறுக்கினர்.
இதனை மாணவர்களில் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தர்மபுரி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.