இந்திய சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (ட்விட்டர்) பக்கங்களில் கடந்த சில நாட்களாக #MainBhiCockroach மற்றும் Cockroach Janata Party (CJP) என்ற பெயர்கள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒற்றைக் கருத்துக்கு எதிராக, நாட்டின் வேலையில்லா இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்த அரசியல் இயக்கம், தற்போது இந்திய அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
வெறும் 4 நாட்களில் 66 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்ஸைப் பெற்று, மெயின்ஸ்ட்ரீம் அரசியல் கட்சிகளையே இந்த ‘கரப்பான்பூச்சி கட்சி’ மிரள வைத்துள்ளது. தலைமை நீதிபதியின் இந்த ‘கரப்பான்பூச்சி’ ஒப்பீடு, இந்தியாவின் தற்போதைய வேலையில்லாத் திண்டாட்டத்தால் தவித்து வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதை புண்படுத்தியது.
மறுநாளே நீதிபதி இதற்கு விளக்கம் அளித்து, “நான் போலி சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டுமே குறிப்பிட்டேன், இளைஞர்கள் இந்தியாவின் தூண்கள்” எனக் கூறினாலும், அதற்குள் சமூக வலைத்தளங்களில் போராட்டம் வெடித்தது.
நீதிபதியின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சமூக வலைத்தள வியூகவாதியான அபிஜீத் திப்கே (Abhijeet Dipke) என்பவர், “எல்லா கரப்பான்பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன?” என்று ஒரு போஸ்ட் போட்டார். இதுதான் ‘ காக்ரோச் ஜனதா கட்சி ‘ (CJP) உருவாகக் காரணமாக அமைந்தது.










