தென்னிந்திய சினிமாவில் பல பாடல்களை தன் குரலால் பாடி மயக்கியவர் ஜானகி. இவர் இதுவரை 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடலுக்கு மயங்காத இதயங்களை இல்லை எனக் கூறுமளவிற்கு இவர் குரல் அவ்வளவு இனிமையாக இருக்கும்.
ஊரு சனம் தூங்கிடுச்சு, ஒரு சந்தன காட்டுக்குள்ளே, ஒரு கிளி உருகுது என பல பாடல்கள் இவர் குரலில் வெற்றி பெற்றுள்ளன. சமீபத்தில் தனுஷ் நடித்து விஐபி படத்தில் அம்மா அம்மா என்ற பாடலில் இவரும் தனுஷுடன் இணைந்து டூயட் பாடி இருப்பார்.
இந்நிலையில் அவர் நேற்று காலமானதாக தகவல்கள் உலா வந்தன. இது குறித்து அவரின் மகன் முரளி கிருஷ்ணா அம்மா ஜானகி நலமாக உள்ளார். அவருக்கு சிறிய ஆபரேஷன் நடைபெற்றது. அவரின் உடல் சீராக முன்னேறி வருகிறது என கூறியுள்ளார். மேலும் பிரபல பாடகரான எஸ்பிபி ஜானகி நலமாக இருக்கிறார். அவரிடம் செல்போனில் பேசும் பொழுது என்னை ஆறு முறை கொன்று விட்டார்களே என சிரித்தபடி பதில் கூறினார்.