நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக குறைந்த தொகுதிகளில் மட்டுமே வென்றதால் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்த நிலையில், பழனிசாமி தான் தங்கி இருந்த அரசின் செவ்வந்தி இல்லத்தை காலி செய்து சென்னை ராயப்பேட்டையில் நேற்று குடியேறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் எம்எல்ஏவாக வெற்றி பெற்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக பதவியேற்றார். அப்போது அவருக்கு, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அரசின் செவ்வந்தி இல்லம் வழங்கப்பட்டது.
கடந்த 2016 தேர்தலிலும் வெற்றி பெற்று, ஜெயலலிதா அமைச்சரவையில் நீடித்தார். அதனால், அரசின் செவ்வந்தி இல்லத்திலேயே தங்கி இருந்தார். அதன் பின்னர் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அப்போதும் செவ்வந்தி இல்லத்திலேயே குடியிருந்து வந்தார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, 3-ம் இடம் பிடித்தது. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்தார். இந்நிலையில், அரசு இல்லங்களை காலி செய்யுமாறு பழனிசாமி மற்றும் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு, அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.










