பாக்யராஜ் சாரை என் வாழ்நாள் எல்லாம் மறக்க முடியாது. இங்கு வந்ததற்கு முக்கிய காரணம் கூட அதுதான். அதை எப்படியாவது மக்களுக்கு சொல்ல வேண்டும் எனக் காத்திருந்தேன். 95ல் சிவாஜி சாருக்கு செவாலே விருது மலேசியாவில் கொடுத்தார்கள். அதற்காக சினிமா துறை மொத்தமும் அவரை பாராட்ட வேண்டும், அரசும் சேர்ந்து பாராட்ட வேண்டும் என சேப்பாக்கம் மைதானத்தில் விழா ஏற்பாடானது.அதற்கு முதலமைச்சர் தான் சிறப்பு விருந்தினர். கடைசியில் நான் தான் நன்றியுரை வழங்க வேண்டும். நான் பேசும் போது ஜெயலலிதாவை கோபமாக விமர்சித்து பேசிவிட்டேன். எப்போதும் கோபத்திற்கு ஆயுசு கம்மி, ஆனால் கோபத்தில் உதிர்த்த வார்த்தைகளுக்கு ஆயுசு அதிகம். அதனால் தான் கோபத்தில் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என பெரியவர்கள் சொல்வார்கள்.
நான் பேசி முடித்த பின்பு எல்லோர் முகமும் வாடியது. ஸ்ரீதேவி கூட என்ன இப்படி பேசிவிட்டீர்கள் எனக் கூறினார். மைதானத்துக்கு வெளியே இருக்கும் பேருந்துக்கு செல்ல எல்லோரும் ஜீப்பில் செல்லும் போது நானும் அதில் வருகிறேன் எனக் கூறினேன்.அது ஓப்பன் ஜீப், சிலர் கல்லைவிட்டு எறிந்தனர். அதே சமயம் பாட்ஷா படம் வெளியான நேரம் என்பதால், ரசிகர்கள் ஆர்வமாக வந்து ஆட்டோகிராப் வாங்கினார். எல்லோருக்கும் கொடுத்துவிட்டு வருவதற்குள் நாங்கள் வந்த பேருந்து மூன்றும் கிளம்பிவிட்டது.
நான் இந்தக் கூட்டத்துக்குள் மாட்டிக்கொண்டேன். தூரத்தில் போலீஸ் ஜீப் இருந்தது அவர்களும் ஜெயலதாவை எதிர்த்து பேசிய என்னை காப்பாற்ற முயன்றால் எதுவும் பிரச்சனை வருமோ என நினைத்து வேடிக்கை பார்த்தனர். சிலர் அடிக்கிறார்கள், கிள்ளுகிறார்கள் நான் என்ன செய்வது என யோசிக்கும் முன் ஒரு குரல் கேட்டது, பார்த்தால் பாக்யராஜ் ஓடி வருகிறார். அவர் வந்து போலீசிடம் ஆவேசமாக பேசி என்னை போலீஸ் ஜீப்பில் ஏற்றி பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து செல்ல வைத்தார். அதை என் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்” என்றார்.










