இந்தியாவின் முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின், அறிமுக ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் (ETPL) தொடரில் டப்ளின் கார்டியன்ஸ் (Dublin Guardians) அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்பொறுப்பை ஏற்கவுள்ளார். ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனது கிரிக்கெட் பயணத்தின் அடுத்த கட்டமாக இந்த வாய்ப்பை அவர் பார்க்கிறார்.
ராகுல் டிராவிட்டுக்கு சொந்தமான இந்த அணியை வழிநடத்தவுள்ள அஸ்வின், உள்நாட்டு கிரிக்கெட்டில் தான் ஏற்கனவே செய்த இதே போன்ற பணிகளின் தொடர்ச்சியே என்று கூறியுள்ளார்.2024 ஆம் ஆண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை அதன் முதல் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) சாம்பியன் பட்டத்திற்கு வழிநடத்தியபோது, கேப்டன் மற்றும் மெண்டர் பணியை வெற்றிகரமாக இணைத்துச் செயல்பட்டார். மேலும் அவர் ஐபிஎல் தொடரிலும் 28 போட்டிகளில் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார்.
“எனது கிரிக்கெட் வாழ்க்கையில் வெறும் வீரராக மட்டுமே இருப்பதை விட, கூடுதல் பங்களிப்பை வழங்க விரும்பும் ஒரு கட்டத்தில் நான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன்” என்று ETPL வீரர்கள் ஏலத்திற்குப் பிறகு அஸ்வின் கூறினார். “உள்நாட்டு கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பயிற்சியாளர் மற்றும் கேப்டனாகச் செயல்பட்டு வருகிறேன். “நான் ஒரு வீரராக இருந்தாலும், வழிகாட்டியாக இருந்தாலும் அல்லது கேப்டனாக இருந்தாலும், அணிக்குத் தேவையான சரியான முடிவுகளையே எடுப்பேன், அது என்னைச் சார்ந்த முடிவாக இருந்தாலும் சரி.”










