மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.
இந்தச் சூழலில் நீட் தேர்வுக்கு முன்பாக ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் ராஜஸ்தான் போலீஸார் இணைந்து நடத்திய விசாரணையில் பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுதொடர்பாக என்டிஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய அளவிலான தேர்வுகளை நேர்மையாகவும், நம்பகத்தன்மையுடனும் நடத்த என்டிஏ உறுதி பூண்டிருக்கிறது.
நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்களை விசாரிக்க மத்திய புலனாய்வு அமைப்புகளைக் கேட்டுக் கொண்டோம். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, உத்தராகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களின் போலீஸாரிடம் இருந்து ஆதாரங்களைப் பெற்று முழுமையான விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.










