திருமணம் முடிந்தவுடன் பொதுவாக எல்லோரும், அனைவருக்கும் விருந்து கொடுப்பது, மொய் வாங்குவது என்ற வேலையில் ஈடுபடுவார்கள். ஆனால் இந்த சற்று வித்தியாசமாக ஒரு தம்பதி யோசித்துள்ளனர். அதற்கு வாழ்த்துக்கள் தற்போது குவிந்து வருகின்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த புதுமண தம்பதி இந்த சிறப்பான காரியத்தை செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள வெங்கடாஜலஸ்வரர் கோவிலில் மணிகண்டன் மற்றும் பிரியங்கா என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்த கையோடு தன்னுடைய சேமிப்பு பணத்தை தாம் படித்த அரசு பள்ளிக்கு கல்வி வளர்ச்சி பணிகளுக்காக நிதி அளிக்க மணிகண்டன் ஆசைப்பட்டுள்ளார்.
இதை பிரியங்காவிடம் தெரிவிக்க உடனே அவரும் சம்மதம் சொல்ல இருவரும் உடனடியாக திருமணம் முடிந்த திருமண கோலத்தோடு அருகில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் ரூபாய் 10 ஆயிரத்திற்கான தொகை மணிகண்டன் பிரியங்கா தம்பதியினர் அளித்துள்ளனர். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு மண்டபத்திற்கு மீண்டும் சென்று உள்ளனர். இது தொடர்பாக புதுமண தம்பதி மணிகண்டன் கூறுகையில் இந்த பள்ளியில் தான் நான் கல்வி பயின்றேன். இந்த பள்ளிக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை, அது ஒரு நல்லதொரு நாளில் செய்வதற்காக இந்த நாளில் நான் செய்தேன், என்று அவர் கூறியுள்ளார். மணிகண்டன் பிரியங்கா தம்பதியின் இந்த செயல் அந்த ஊர் மக்களை மிகவும் உற்சாகப்படுத்தி உள்ளது .