சென்னையில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் தடுப்பூசி போடாதவர்களுக்கு இந்தத் தொற்று எளிதில் பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து சென்னை குழந்தை நல மருத்துவர் வேல்முருகன் கண்ணப்பன் கூறியதாவது, “தட்டம்மை என்பது காற்றின் மூலம் மிகவும் எளிதாக பரவக்கூடிய வைரஸ் தொற்று. கதவுப் கைப்பிடி, பொம்மைகள் மற்றும் மேஜைகள் போன்ற மேற்பரப்புகளை தொடுவது மூலமாகவும் பரவலாம். சில நேரங்களில் தட்டம்மை பாதிக்கப்பட்டவர்களை கவனித்தல் அல்லது ஒரே பாத்திரத்தை பயன்படுத்துவது மூலமாகவும் பரவ செய்யலாம்” என்கிறார்.
ஒருவருக்குத் தட்டம்மை தொற்று இருந்தால், உடலில் தடிப்புகள் தோன்றுவதற்கு 4 நாட்களுக்கு முன்பே அவர் மற்றவர்களுக்கு வைரஸ் பரப்ப தொடங்கிவிடுவார்.சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் தட்டம்மை உயிருக்கே ஆபத்தான சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என மருத்துவர் வேல்முருகன் எச்சரிக்கிறார்.










