கடந்த வாரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில், கட்சியின் உத்தரவை மீறி எஸ்பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.
தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதன் தொடர்ச்சியாக, எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள், அவரை அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்குவதற்கான அடுத்தகட்ட வியூகத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
கட்சியின் உட்கட்சி விதிகளின்படி, பொதுக்குழுவைக் கூட்டி எடப்பாடி பழனிசாமியை பதவியிறக்கம் செய்வதற்கான வேலைகளில் முன்னாள் அமைச்சர் எஸ்பி. வேலுமணி, சி.வி. சண்முகம், டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் மூத்த தலைவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
தற்போது எடப்பாடி பழனிசாமியின் ஒருதலைப்பட்சமான போக்கிற்கு எதிராகவும், கட்சியைப் பலப்படுத்த பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் ஐந்தில் இரண்டு பங்கு (2/5) பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்,” என்று அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசனத்தின்படி தங்களைக் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்க இபிஎஸ்-க்கு முழு அதிகாரம் இல்லை என்று சி.வி. சண்முகம் ஏற்கனவே போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், விஜயபாஸ்கரின் இந்த அறிக்கை இபிஎஸ் தரப்புக்குக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை நிலையப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலோர் இன்னும் தன் பக்கமே இருப்பதாக நம்பும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, இந்த விவகாரத்தைச் சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.
கட்சி உத்தரவை மீறிய 25 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் மனு அளித்துள்ள நிலையில், தற்போது பொதுக்குழு உறுப்பினர்களைத் தக்கவைக்கும் முயற்சியிலும் இபிஎஸ் தீவிரம் காட்டி வருகிறார்.
அதிமுகவின் வரலாற்றில் பொதுக்குழுக்கள் எப்போதுமே திருப்புமுனையாக அமைந்திருக்கின்றன. ஓபிஎஸ்-இபிஎஸ் மோதலுக்குப் பிறகு, தற்போது இபிஎஸ்-க்கு எதிராக வேலுமணி, சண்முகம், விஜயபாஸ்கர் கூட்டணி அமைத்திருப்பது, அதிமுகவின் ஒற்றைத் தலைமைப் பதவிக்கு மீண்டும் ஒரு மாபெரும் சவாலை உருவாக்கியுள்ளது. பொதுக்குழு கூட்டப்படுமா அல்லது இந்த விவகாரம் மீண்டும் நீதிமன்றப் படிகளை மிதிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.










