திருவனந்தபுரம்: கேரள சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், ‘டுடேஸ் சாணக்கியா’ வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகள் கேரள அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. அங்கு இந்த முறை ஆளுங்கட்சியான எல்.டி.எஃப் (LDF) மற்றும் எதிர்க்கட்சியான யு.டி.எஃப் (UDF) இடையே நிலவும் மிகக் கடுமையான போட்டி இருப்பதாக டுடேஸ் சாணக்கியா தெரிவித்துள்ளது.
கேரளாவில் மொத்தம் 140 தொகுதிகள் உள்ள நிலையில், அங்குக் கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது. தமிழ்நாடு, மேற்கு வங்கத்தோடு இணைந்து தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே பல்வேறு ஊடகங்களும் எக்சிட் போல் முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
கேரளா எக்சிட் போல் கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு கடும் போட்டி இருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே டுடேஸ் சாணக்கியா (Today’s Chanakya) வெளியிட்டுள்ள எக்சிட் போல்களில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










