இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய மகளிர் அணி அபாரமாக செயல்பட்டு, இறுதியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றனர். இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா கோல்டன் டக் ஆகி சொதப்பினார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் அணியினர், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.
இதில், முதல் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணியினர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தனர். முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணியில், கேப்டன் ஸ்மிருதி மந்தனா கோல்டன் டக் ஆனார். அடுத்து, ஷபாலி வர்மாவும் 3 பந்தில் 2 ரன்னை மட்டும் அடித்த நிலையில், அதன்பிறகு யாஷிகா பாடியா மற்றும் ஜெமிமா ரோட்ரிகஸ் ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அடுத்து, இறுதிக் கட்டத்தில், தீப்தி சர்மா 13 பந்தில் 22 ரன்களை எடுத்ததால், இந்திய மகளிர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 188/7 ரன்களை எடுத்தது. இலக்கை துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணியில், அமி ஜோன்ஸ் மட்டுமே சிறப்பாக விளையாடினார்.
இவர், 48 பந்துகளில் 9 பவுண்டரிகள் உட்பட 67 ரன்களை குவித்து அசத்தினார். மற்ற பேட்டர்கள் யாரும் 25 ரன்களை கூட தொடவில்லை. இதனால், இங்கிலாந்து மகளிர் அணி, 20 ஓவர்களில் 150/8 ரன்களை மட்டும் எடுத்து, 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இரண்டாவது போட்டி, வரும் மே 30ஆம் தேதி நடைபெறும். பிறகு, இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி, வரும் ஜூன் 2ஆம் தேதி நடைபெறும். இத்தொடர் முடிந்தப் பிறகு, இரு அணிகளுக்கும் இடையில் ஒரு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி, ஜூன் 10ஆம் தேதி துவங்கி 13ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டி20 தரவரிசையில் இங்கிலாந்து மகளிர் அணி 2ஆவது இடத்திலும், இந்திய மகளிர் அணி மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. தற்போது, டி20 தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றினால், இரண்டாவது இடத்திற்கு முன்னேறிவிட முடியும். ஆஸ்திரேலிய மகளிர் அணி, அசைக்க முடியாத அளவுக்கு முதல் இடத்தில் இருக்கிறார்கள்










