அமெரிக்காவில் எச்-1 விசா அடிப்படையில் பணிபுரியும் ஐ.டி.ஊழியர்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்படுவதால், 60 நாட்களுக்குள் வேறு வேலை தேடிக்கொள்ளாவிட்டால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் சிலிக்கான் வேலியை உலுக்கி வரும் அடுத்தடுத்த பணிநீக்க அலைகள், அங்குள்ள இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
குறிப்பாக, மெட்டா நிறுவனம் தனது முதலீடுகளைச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பக்கம் திருப்பி உள்ளது. இந்நிலையில், சுமார் 8,000 ஊழியர்களை திடீரென பணிநீக்கம் செய்துள்ள விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பணிபுரியும் பெரும்பாலான இந்தியர்கள் எச்-1பி விசாவை நம்பியே உள்ளனர். தற்போதைய அமெரிக்க விதிகளின்படி, வேலையிழந்த 60 நாட்களுக்குள் புதிய ஸ்பான்சருடன் கூடிய வேலையைக் கண்டறிய வேண்டும்; தவறினால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
ஒரு காலத்தில் வேலை வாய்ப்புக்கான சொர்க்கமாகப் பார்க்கப்பட்ட அமெரிக்கா, இன்று இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு தர்மசங்கடமான வாழ்வாதாரப் போராட்டக் களமாக மாறியுள்ளது.










