உலகக் கோப்பை போட்டிகளில் ஈரான் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் நியாயமற்றவை எனக் குற்றம் சாட்டியுள்ள ஈரான் கால்பந்து கூட்டமைப்பு, இதுகுறித்து ஃபிஃபாவிடம் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் அரிசோனாவில் இருந்த ஈரான் அணியின் அடிப்படை முகாம், உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு மெக்சிகோவின் டிஜுவானாவுக்கு மாற்றப்பட்டது. இதனால், அமெரிக்காவில் நடைபெறும் போட்டிகளுக்காக ஈரான் அணி போட்டிக்கு ஒரு நாள் முன்பே பயணம் செய்து, போட்டி முடிந்த உடனே மீண்டும் மெக்சிகோ திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரின் பின்னணியில் முன்னர் விதிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளின் காரணமாக இந்த கட்டுப்பாடுகள் தொடர்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஃபிஃபாவின் 2026 உலகக் கோப்பை விதிகளின்படி அணிகள் போட்டிக்கு ஒரு நாள் முன்பு பயணம் செய்து, போட்டி முடிந்த பிறகு தங்களது முகாமுக்கு திரும்ப வேண்டும் என்ற நடைமுறையும் உள்ளது.
போர் நிறுத்தத்திற்கான இடைக்கால ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தாலும், ஈரான் அணிக்கான கட்டுப்பாடுகள் இன்னும் நீக்கப்படவில்லை. அணியின் சில அதிகாரிகள் மற்றும் உதவிப் பணியாளர்கள் அமெரிக்க விசா பெற முடியாத நிலையில் உள்ளனர். வீரர் மெஹ்தி தோராபியும் முதல் போட்டிக்குப் பிறகு புதிய விசா பெற டிஜுவானாவில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தை நாட வேண்டியிருந்தது.ஈரான் தனது இறுதி குரூப் ஸ்டேஜ் போட்டியில் ஜூன் 26ஆம் தேதி சியாட்டிலில் எகிப்து அணியை எதிர்கொள்ள உள்ளது.










