தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தொகுதியில் தோல்வியை தழுவியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருத்தப்பட்டதாக புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
தனிப் பெரும் கட்சி என்ற அந்தஸ்தில் இருக்கும் தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைக்கவில்லை. நேற்று நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு தெரிவித்தார். ஆனாலும் சில குழப்பங்கள் நீடித்த வண்ணம் உள்ளன.
அதிமுகவில் இருந்து சில எம்.எல்.ஏக்களை இழுக்க தவெக முயற்சிப்பதாக பேச்சு அடிபட்டது. உடனே சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் உடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் புதுச்சேரி அழைத்து சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தவெக ஆட்சிக் கட்டிலில் அமர முடியவில்லை எனில், திமுக – அதிமுக ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைக்க காய் நகர்த்தப்பட்டு வருவதாக பரபரப்பாக பேசப்படுகின்றன. திருமாவளவனை பொது வேட்பாளராக நிறுத்தி அவருக்கு திமுகவும், அதிமுகவும் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்க இருப்பதாக கூறுகின்றனர்.










