வானத்தைப் பார்க்காதே, கடவுள் நம்மைக் காப்பாற்ற வரமாட்டார், நாம் உலகின் முதலிடத்தில் உள்ள அணி. அதை மனதில் வைத்து விளையாடுவோம்’ என்று 2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் 130 ரன்களை Defend செய்வதற்கு முன்பு அணியிடம் கேப்டன் தோனி கூறிய வார்த்தைகள் இவை. பரபரப்பான போட்டியில் எம்.எஸ். தோனியின் சமயோசித அறிவால் வெற்றி கிட்டிய நாளே இன்று.
இந்த கோப்பையை பெற்றதன் மூலம் 3 அய்.சி.சி. டிராபிகளையும் வென்ற இந்திய கேப்டனாக மாறினார் தோனி. எப்போதும் அமைதியாகவே இருந்து ‘கூல் கேப்டன்’ என்ற பெயரெடுத்த தோனி, அந்த வெற்றியின் போது துள்ளிக்குதித்து கொண்டாடியதை எந்த இந்திய ரசிகரால் மறக்க முடியும்..? 2013ஆம் ஆண்டு இதே நாளான ஜூன் 23ஆம் தேதியன்று இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் சொந்தமண்ணில் இங்கிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.
மழையால் 50 ஓவர் ஆட்டம் 20 ஓவர்களாக குறைக்கப்பட, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியால் 129 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. கோலி, தவான், ஜடேஜா 3 பேரும் பேட்டிங்கில் முக்கிய பங்காற்றினர். 30 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இங்கிலாந்து 19.5 ஓவர் வரை தங்களுடைய பக்கமே ஆட்டத்தை வைத்திருந்தது.
கடைசி ஓவரில் 15 ரன்கள் அடிக்கவேண்டிய இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தை வீச 5 பந்துகளில் 9 ரன்களை விளாசியது இங்கிலாந்து. கடைசி பந்தில் 6 ரன்கள் அடிக்கவேண்டிய நிலையில், 5 ரன்கள் அடித்தால் சூப்பர் ஓவர் அல்லது சிக்சர் அடித்து இங்கிலாந்து வெல்லுமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் கடைசி பந்தை அஸ்வின் டாட் பந்தாக வீச இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.










