கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில் கடந்த சில நாட்களாக அதிர்ச்சியூட்டும் விவகாரத்தில் சிக்கியுள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயில் தொடர்பாக கடந்த ஆண்டுகளில் நடைபெற்றுவந்த பயங்கரமான சம்பவங்கள் தொடர்பான ஒரு முக்கிய புகார் தற்போது வெளியாகியுள்ளது.
மங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் சச்சின் தேஷ்பாண்டே அளித்த தகவலின்படி, தர்மஸ்தலா கோயிலில் 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தூய்மைப் பணியாளராக பணியாற்றிய 52 வயதுடைய ஒருவர், சமீபத்தில் தர்மஸ்தலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில், கடந்த காலங்களில் தர்மஸ்தலா கோயிலில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், அந்த உடல்களை நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைக்கும் செயல்கள் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தூய்மைப் பணியாளருக்கு பணியில் இருந்தபோது ஒரு முறை ஒரு உடலை புதைக்க சொல்லி வற்புறுத்தப்பட்டதாக கூறியுள்ளார். அந்த பணியை அவர் மறுத்ததால், கோயில் நிர்வாகத்தினர் அவரை அடித்து சித்ரவதை செய்துள்ளதாகவும், குடும்பத்துடன் கொளுத்திவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்தும், கடந்த 10 ஆண்டுகளில் பல பெண்களின் உடல்களை ஆற்றங்கரையில் புதைக்கும் வேலையை அவர் செய்துள்ளதாகவும், சில உடல்களை எரிக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் பள்ளி மாணவிகள் வரை உள்ளனர் என்று அவர் தெரிவித்திருக்கிறார். ஒரு சம்பவத்தில், ஒரு பள்ளி மாணவியின் உடலை, அவரது பாடப்புத்தக பையுடன் சேர்த்து எரித்ததாகவும் கூறியுள்ளார்.
2014-ம் ஆண்டு இந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கே கோயில் நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரை கொல்ல முயற்சித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அவர் தனது குடும்பத்துடன் தலைமறைவாகி தற்போது மீண்டும் முன்வந்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் தனஞ்செய் மூலமாக கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, புகார் அளித்த முன்னாள் தூய்மைப் பணியாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் வருகின்றது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த சம்பவம் தற்போது கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.










