நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் அருள் மாதேஸ்வரன் படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி மற்றும் களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு பகலாக விறுவிறுப்பாக நடந்து வந்தது.
போர்க்கால காட்சிகள், குண்டுவெடிப்புகள் உள்ளிட்ட காட்சிகள் உள்ளிட்டவை வனத்துறை பகுதிக்கு அருகில் கிராமம் கோவில் போன்று பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினரும், மதிமுக ஒன்றிய செயலாளர் ராம உதயசூரியன் வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியிருந்தார். இந்த நிலையில் நேற்று தென்காசி செய்தி மக்கள் தொடர்பு அலுவலக வாட்ஸ் ஆப் குழுவில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி ராமசுப்பிரமணியன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் தென்காசி பகுதியில் நடைபெறும் நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படப்பிடிப்புக்கு மாவட்ட நிர்வாகம் தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை ஆகியோரிடம் அனுமதி பெறாத காரணத்தால் படப்பிடிப்புக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.