Tuesday, September 8, 2026
-- Advertisement--

தேசிய அளவில் கவனம் பெற்ற ‘நந்தன்’.. டெல்லி தமிழ்ச் சங்கம் பாராட்டு

2024இல் இரா.சரவணன் இயக்கத்தில் வெளியான படம் ‘நந்தன்’. தலித் பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு வந்தும் உரிய அங்கீகாரத்தை அடைய முடியாமல் போராடும் நிஜத்தை ‘நந்தன்’ படத்தில் கதையாக்கி இருந்தார்கள். படம் வெளியானபோது தமிழகம் முழுக்க பரபரப்பைக் கிளப்பியது. படம் வெளியான பிறகு தமிழகம் முழுக்க பட்டியலின பஞ்சாயத்துத் தலைவர்கள் சுதந்திரமாகக் கொடியேற்றவும், உரிய அதிகாரங்களை அடையவும் அதிரடியாக உத்தரவிட்டது தமிழக அரசு. கடந்த வருட குடியரசு தினத்தில் இதுவரை நடக்காத அதிசயமாகத் தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின பஞ்சாயத்துத் தலைவர்கள் அனைவரும் கொடியேற்றினர்.

இந்நிலையில், சமூக மாற்றத்தை நிகழ்த்திய திரைப்படமாக ‘நந்தன்’ படத்தைத் தேர்ந்தெடுத்து நடிகர் சசிகுமார், இயக்குநர் இரா.சரவணன் இருவருக்கும் பாராட்டு விழா நடத்தி இருக்கிறது டெல்லி தமிழ்ச் சங்கம். 20.6.26 அன்று மாலை டெல்லி தமிழ்ச் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் இந்திய கலாசார அமைச்சகத்தின் இயக்குநர் Shah Faesal IAS சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். 

“படத்தில் நான் பட்ட சிரமங்கள் யாவும் டெல்லி மக்களின் பாராட்டில் சரியாகிவிட்டன. ‘நந்தன்’ படம் வெளியான பிறகு எங்களுக்கு விடிவு பிறந்திருப்பதாக ஒரு பெண் பஞ்சாயத்துத் தலைவர் என் கைகளைப் பிடித்து அழுதார். அந்தக் கண்ணீர் தேசிய விருதுக்கு நிகரானது” என்றார் சசிகுமார்.

“எப்போதுமே சினிமா தமிழ் மக்களின் ரத்தத்துடன் கலந்தது. அதனால்தான் முதலமைச்சரையே தமிழ் மக்கள் சினிமாவில் இருந்து தேர்ந்தெடுக்கிறார்கள். ‘நந்தன்’ படத்திற்குக் கிடைத்திருக்கும் இந்தப் பாராட்டு அடுத்தடுத்த படைப்புகளை இன்னும் பொறுப்போடு செய்ய வைக்கும்” என்றார் இயக்குநர் இரா.சரவணன். சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்ந்தெடுக்கப்பட்டு சசிகுமார், இரா.சரவணன் இருவருக்கும் விருது கொடுக்கப்பட்டது..

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles