இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரானா பாதிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் கிருமி தொற்று உள்ளவர்களின் இடத்தை அந்தப் பகுதிக்கு மக்கள் செல்லாதவாறு அந்த பாதை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொற்று உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரில் பெண் ஒருவருக்கும் அவரது இரண்டு குழந்தைகளுக்கும் தொற்று இருப்பது உறுதியானது, இதனை தொடர்ந்து அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டனர். அதே பகுதியில் வயதான தம்பதிகள் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதும் அங்கு வந்த சுகாதார பணியாளர்கள் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டிற்கு முன் தகரங்களை வைத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராதபடி அடைத்துள்ளனர். இதனால் அந்த வீட்டில் உள்ள அத்தியாவசியதிற்காக கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன.
அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் கூட எப்படி வீட்டை விட்டு வெளியே வருவார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து அந்த வீடுகளில் வெளியே அமைக்கப்பட்ட தகரங்கள் உடனடியாக நீக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அந்தப் பகுதியின் பொறுப்பு அதிகாரி கூறுகையில் ஏன் இப்படி ஊழியர்கள் செய்தார்கள் என்று தெரியவில்லை, கீழ்நிலை அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவு அளிக்கப்பட்டு தகரங்கள் நீக்கப்பட்டன.
நான் தடைசெய்யப்பட்ட தெருக்களின் பாதையைத்தான் தகரத்தால் அடைக்க சொன்னேன், தனியாக வீடுகளை சொல்லவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.