ஐபிஎல் 2026 தொடரின் குவாலிபையர் 2 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியை வீழ்த்துவதற்காகக் குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்கள் கையாண்ட ‘பாடி லைன்’ யுத்தி, தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி குஜராத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவரைச் சாதாரண பந்துகளால் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்த குஜராத் வேகப்பந்து வீச்சாளர்கள், வைபவ்வின் உடலை குறிவைத்து வீசும் ‘பாடி லைன்’ உத்தியைக் கையாண்டனர்.
போட்டியின் 14-வது ஓவரில், உலகின் அதிவேக பந்துவீச்சாளரான ககிசோ ரபாடா சுமார் 153 கி.மீ வேகத்தில் வீசிய ஒரு கடுமையான பவுன்சர் பந்து, வைபவ்வின் ஹெல்மெட்டை பலமாகத் தாக்கியது. இதில் நிலைகுலைந்து போன அவருக்கு உடனடியாக மைதானத்தில் ‘கன்கஷன்’ பரிசோதனை செய்யப்பட்டது.
16 வயதில் சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடியபோது வக்கார் யூனிஸ் வீசிய பந்தில் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும் அவர் தொடர்ந்து விளையாடினார். ஒரு ஜாம்பவானாக உருவாக வேண்டும் என்றால் இதுபோன்ற அக்னிப் பரீட்சைகளை வைபவ் சந்தித்துதான் ஆக வேண்டும் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.










