தமிழ் சினிமாவின் ஈடுஇணையற்ற இயக்குநரான பாரதிராஜா, கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று தன்னுடைய 84வது வயதில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகை அதிர்ச்சியடைய வைத்திருக்கும் நிலையில், நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் உடலுக்கு அஞ்சலியும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் விஜய் பாரதிராஜா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன். கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்கள். தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
முக ஸ்டாலின் தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா
அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி
தென் தமிழகத்தின் கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர்; திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர்; தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் திரு. பாரதிராஜா அவர்கள். அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். “என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும்.
தமிழ் சினிமாவின் கிராமிய வாழ்வியலை உலகுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் இமயம் பாரதிராஜா 84வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, பாரிவேந்தர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், விஷால், ஜிவி பிரகாஷ், சிபி சத்யராஜ் போன்ற திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.










