தமிழக சட்டப்பேரவைத் தொடரின் கடைசி நாளான நேற்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகளுக்குப் பதிலளித்து முதல்வர் விஜய் பேசியதாவது: நமது தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தாலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடிகள், சிலரின் திட்டமிட்ட நடவடிக்கைகள் மின்வெட்டுக்குக் காரணமாக இருக்கின்றன. விரைவில் இந்த மின்வெட்டு நிலைமை அறவே நீக்கப்படும். சட்டம் – ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
அதேபோல், போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் நம் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம். மக்கள் நமக்கு ஓட்டுப் போட்டதும், குடும்பம் குடும்பமாக மக்கள் ஆதரவு தெரிவித்ததும் தவறு என்கிறார்கள்.இது இப்போது இல்லை. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இருக்கிறது. எம்ஜிஆர் வெற்றி பெற்ற போது, அப்போதும் மக்களைத் தவறாகப் பேசியிருக்கிறார்கள்.
கடந்த 50 ஆண்டுகளாக ஒரே ‘டெக்னிக்’. தொழில்நுட்பம் எல்லாம் மாறி வேறு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. கொஞ்சம் டெக்னிக்கையாவது மாற்ற வேண்டும். 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் இந்த ஆட்டம் ஆடியது. பேசு பேசு என்றால் அப்புறம் நான் என்ன செய்வது? ஆளுநர் உரையன்று, தேசிய கீதம் 2 முறை பாடினது தவறு.
அப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை. மரபையே மாற்றி விட்டீர்கள் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறினர். கடந்த 2021 ஆகஸ்ட் 2-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, தேசிய கீதத்தைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொன்னார்கள். இதை கேட்டால் அது குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி என்று சொல்வார்கள். அதற்காக நம்முடைய அரசியல் ரீதியான கொள்கைகளையோ, மாநில உரிமைகளையோ கொஞ்சமும் விட்டு தரமாட்டோம்.. நாம் யாருடைய அணியும் இல்லை. மாநில உரிமையில் எப்போதும் உறுதியாக இருப்போம்.










