எரிசக்தி துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 நபர்களுக்கு உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 நபர்களுக்கு உதவிக் கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வு இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
401 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வில், முதலாவது பணி நியமன ஆணை அட்ஷய லட்சுமி என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டது. அட்ஷய லட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவருக்கு இன்னும் மூன்று நாட்களில் பிரசவ தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், முதலமைச்சர் விஜய் மேடையில் இருந்து இறங்கி வந்து, நிறைமாத கர்ப்பிணியான அட்ஷய லட்சுமி இருக்கும் இடத்திற்கே சென்று பணி நியமன ஆணையை கொடுத்து சிறப்பித்தார்.
தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இதன் மூலமாக நாளை இவ்வுலகிற்கு வருகை தரவிருக்கும் புத்தம்புது உயிரின் பாதுகாப்பிற்கும் தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இந்த செயல் அமைந்துள்ளது என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.










