தமிழகத்தில் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு, இன்று (மே 26) முதல் மாணவர்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த, வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும், விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும் இணையவழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பள்ளி மாணவர்களாக எழுதியவர்களில் தேர்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்குச் சென்று செவ்வாய்க்கிழமை (மே 26) முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக் கட்டணமாக ரூ.125, இணையவழி பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.195 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தைப் பள்ளியில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் பள்ளியிலும், தனித்தேர்வர்கள் சேவை மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும்.










