தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நடிகர் சத்யராஜ், பான் இந்தியா படங்களுக்கு ஃபர்ஸ்ட் சாய்ஸாக உள்ளார்.
80 மற்றும் 90களில் தமிழ் திரையுலகை கலக்கியவர், தற்கால சினிமாவில் தனக்கு ஏற்ப கதாபாத்திரங்களை தேர்வு செய்து அசத்தி வருகிறார்.
அரசியல் ரீதியான கருத்துகளை வெளிப்படுத்துவதோடு, சமூக பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார் சத்யராஜ்.
இப்படி பொது வாழ்க்கையில் பரபரப்பாக இருக்கும் சத்யராஜை போலவே ஊட்டச்சத்து நிபுணரான அவரது மகளும் தனி கவனம் பெறுபவர்.
மகிழ்மதி இயக்கம் என்ற பெயரில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கி வருகிறார் சத்யராஜ் அவர்களின் மகள் திவ்யா. அண்மையில் மக்களவைத் தேர்தலின் போது கூட பிரபல கட்சியிடம் இருந்து அழைப்பு வந்ததாக கூறி அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றிருந்தார் திவ்யா சத்யராஜ்.
இந்நிலையில், தனது குடும்பத்தின் தற்போதைய நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தனது தாய் மகேஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதாக தெரிவித்துள்ள திவ்யா, தனது தாய்க்கு பிஜி டியூப் மூலமாக மட்டுமே உணவு வழங்குவதாக அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், அவர் உடல்நிலை தேறி பழைய நிலைக்கு கொண்டு வர நம்பிக்கையுடன் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழலில், தனது தந்தை சத்யராஜ் கடந்த நான்கு ஆண்டுகளாக சிங்கிள் பேரண்டாக இருந்து குடும்பத்தை வழிநடத்துவதாக உருக்கத்துடன் தெரிவித்த அவர், சத்யராஜின் அம்மாவும் ஓராண்டுக்கு முன் இறந்து விட்டதால் தனது தந்தைக்கு சிங்கிள் பேரண்டாக தான் இருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தாங்கள் இருவரும் பவர்ஃபுல்லான சிங்கிள் பேரண்ட் க்ளப்பை உருவாக்கியதாக பெருமிதத்துடன் அவர் பதிவிட்டிருந்ததை கண்ட பலரும், அவரது தாயார் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
சத்யராஜின் மனைவி மகேஸ்வரிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் கோமா நிலைக்கு சென்றதாக மருத்துவ வட்டாரங்களில் பேசப்படும் நிலையில், தனது குடும்பச் சூழலை நேர்மறையாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட திவ்யா சத்யராஜை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.