“பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்”… நண்பர் விஜயகாந்த் நலம் குறித்து ட்வீட் செய்த சூப்பர்ஸ்டார்.

vijaykanth

நீரிழிவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலது காலில் உள்ள 3 விரல் அகற்றப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமுடன் இருக்கிறார் என்று தேமுதிக அறிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே கட்சி நடவடிக்கையிலும் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார்.

பெரும்பாலும் வீட்டிலேயே ஓய்வில் இருக்கும் விஜயகாந்த் உடல் பரிசோதனைக்காக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வழக்கம். அந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவரது காலில் உள்ள 3 விரல் அகற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தேமுதிக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று (நேற்று முன்தினம்) விரல் அகற்றப்பட்டது மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.

மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து விஜயகாந்துக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு வெளியிட்ட டுவிட்டர் பதிவில் “என் அருமை நண்பர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பல நடிகர் நடிகைகள் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.