சிக்கன் கிரேவி சாப்பிட்டு குளிர்பானம் குடித்த தாய்,மகள் மர்ம சாவு…!!!

kovilpatti

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்க நகரை சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் 40. அவரது மனைவி கற்பகவல்லி 34. அவர்களுடைய மகன் சண்முக பாண்டி 8 மகள் தர்ஷினி 7 . நேற்று முன்தினம் இரவு கற்பகவல்லி மகளுடன் அங்கு உள்ள ஹோட்டலுக்கு சென்று சிக்கன் கிரேவி வாங்கி வந்து வீட்டில் தயார் செய்திருந்த உணவுடன் சாப்பிட்டுள்ளார்.

அப்போது வயிறு எரிச்சல் ஏற்பட்டதால் அருகில் உள்ள கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி இருவரும் குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உறவினர்கள் அவர்களை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டபின் மேல் சிகிச்சைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்குள் தாய் மகள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

தகவலறிந்த கோவில்பட்டி போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். இருவரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து சாப்பிட்டார்களா அல்லது உணவே விஷமானதா என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியும் என போலீசார் கூறினர். இதற்கிடையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிக்கன் கிரேவி வாங்கிய ஹோட்டல் குளிர்பானம் வாங்கிய கடை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர்.

அவற்றின் மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக தஞ்சாவூருக்கு அனுப்பினர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் கூறுகையில் அவர்கள் சாப்பிட்ட உணவு குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலக்கப்பட்ட இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிக்கன் சாப்பிட்டு விட்டு குளிர் பானம் அருந்துவதால் இழப்பு ஏற்படும் என்று கூற முடியாது என்றார்.