பெண்களுக்கான இலவச டிக்கெட் கொடுத்து பஸ் கண்டக்டர் நூதன மோசடி…!!! வசமாக சிக்கினார் அப்புறம் என்ன நடந்தது தெரியுமா.

Free Bus Ticket

சேலத்தில் அரசு டவுன் பஸ்சில் பெண்களுக்கான இலவச பயண சீட்டை பீகார் ஆண்களிடம் கொடுத்து கட்டணம் வசூலித்த கண்டக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தமிழக சட்டமன்ற தேர்தலின் போது அரசு டவுன் பஸ் பெண்கள் பயணம் செய்ய இலவசமாக அனுமதி அளிக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதன்படி ஆட்சிக்கு வந்து முதல்வராக பதவியேற்றதும் 5 கையெழுத்துகளில் ஒன்றாக டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்ற வாக்குறுதியை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார்.

அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். மேலும் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கும் டவுன் பஸ்ஸில் இலவசமாக பயணத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மூன்று விதமான டிக்கெட் அச்சடிக்கப்பட்டு இலவசமாக பயணிப்பவர்களிடம் கண்டக்டர்கள் வழங்கி வருகின்றனர். இதனை டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் ஜங்ஷன் இருந்து பழைய பஸ் ஸ்டாண்டுக்கு 13 ஆம் நம்பர் டவுன் பஸ் நேற்று காலை புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

அதில் கண்டக்டராக நவீன்குமார் டிரைவராக பிரகாஷ் ஆகியோர் பணியில் இருந்தனர். ஐந்து ரோடு பகுதியில் பஸ் வந்தபோது டிக்கெட் பரிசோதகர்கள் பஸ்ஸில் ஏறி பையனிடம் டிக்கெட்டை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போது ஜங்ஷனிலிருந்து பஸ்சில் ஏறிய பீகார் மாநிலத்தை சேர்ந்த 21 ஆண்கள் பயணிகளுக்கு பெண்களுக்கான இலவச பயண சீட்டை கொடுத்து தலா 6 ரூபாய் வசூலித்தது தெரிய வந்தது. இந்த முறைகேடு தொடர்பாக மண்டல போக்குவரத்து மேலாளர் லட்சுமணனுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.

இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட கண்டக்டர் நவீன்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. டவுன் பஸ்சில் இதுபோல் இலவச பயண டிக்கெட்டை வழங்கி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்துத் கழகம் சேலம் கோட்ட வேளாண் இயக்குநர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.