சோழவள நாட்டில் கரைபுரண்டோடும் காவிரி ஆற்றின் மையப்பகுதியான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகாமையில் அமைந்துள்ள விவசாயமே பிரதானமுடைய கிராமம் கீழப்பெருமழை. இங்கு அமைந்துள்ளது. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆத்மநாத சுவாமி திருக்கோயில்.

தொன்மை சிறப்பு:

பிரணவ சக்தி ஆத்ம சக்தியாய் மலரும் அபூர்வமான ஸ்தலம் . இப்பூவுலகில் செம்பருத்தி மலர் மும்மூர்த்திகளின் முன்னிலையில் தாவரங்களை படைக்கும் பிரம்ம ஸ்ரீ சாகம்பரி தேவியால்
கீழப்பெருமழையில்தான் முதன் முதலில் படைக்கப்பட்டது என்பது வரலாறு.

மீமிசல் அருகே உள்ள தீர்த்தாண்டதானம் எனும் சிவதலத்தில் ஸ்ரீராமருக்காக கடலில் பிரபஞ்சத்தின் அனைத்துத் தீர்த்தங்களையும் மழையாய்ப் பெய்வித்த வருண பகவான் அவற்றின் சாரத்தை இவ்வூரில் அமிர்தசாரலாக்கி இத்தலத்தை மேலும் புனிதப்படுத்தினார் என்பதின் பயனாக இவ்வூருக்கு பெருமழை என பெயர் வர காரணமாயிற்று. இயற்க்கையின் நிலையை தீர்மானிக்க கூடிய வருண பகவான் செம்பருத்திப்பூவை மழையாக பெய்ய வைத்து இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டார் என்பது வரலாறு.

கோயிலின் சிறப்பு:

இவ்வாலயம் நாகப்பட்டினம்-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பாண்டி என்ற கிராமத்தின் தெற்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது . மனதில் நினைத்தவற்றை அருளும் ஆத்மநாதர் மூலவராக காட்சியளிக்கின்றார் . முகத்தில் புன்முறுவலுடன் பக்தர்களுக்கு வேண்டியவற்றை அருளும் அம்பிகையாக அகிலாண்டேஸ்வரி அம்பாள் அமைந்துள்ளார்.

ஆலயத்தின் பின்னால் வலதுபுறம் விநாயகர் , சுப்ரமணியர் ஸ்தலம் அமைந்துள்ளது.மேலும் துர்கை அம்மன் பக்தர்களின் பிணியை தீர்க்கக்கூடிய அம்மாவாக காட்சியளிக்கிறார் . பன்முக ஆஞ்சநேயர் இத்திருத்தலத்தின் இடதுபுறம் அமைந்து வேண்டுவன எல்லாவற்றையும் பக்தர்களுக்கு கொடுக்கின்றார் .

மேலும் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீகால பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இங்கு ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியில் நடக்கும் பூஜைகளில் கலந்துகொள்ளும் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுகின்றார். காலபைரவரை வணங்கிய பலர் இன்று திருமணத்தடை நீங்கி , புத்திரபாக்கியம் பெற்று , கடன் பிரச்சினைகள் நீங்கி , இல்லறம் பெற்றுள்ளனர் என்பதை அவரவர் அனுபவம் வழியாகவே தெரிந்துகொள்ளலாம் மேலும் சனீஸ்வர பகவான் தனி பீடமாக பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.

பரிகார ஸ்தலம் :


இருதயநோய் உள்ளவர் மட்டுமின்றி இருதய நோயே வரக்கூடாது என்று வேண்டுவோரும் வழிபடக்கூடிய வழிபட வேண்டிய அற்புதமான ஸ்தலம் . இருதயத்திற்கு மேல் , கீழ் என இரு பகுதி இருப்பதைப் போல் கீழப்பெருமை மற்றும் இவ்வூரின் அருகிலுள்ள மேலப்பெருமை, என்ற இரண்டுநிலப்பகுதியும் முற்காலத்தில் இதயம் போல் செம்பருத்திப்பூ வடிவில் வண்ணத்தில் தோற்றமளித்தன. நாளடைவில் கீழப்பெருமை, கீழப்பெருமழையாக ஆனது., மேலப்பெருமை மேலப்பெருமழையானது.மேலப்பெருமழை மனித உடலின் மூளையையும் (ஞானம்) கீழப்பெருமழை இருதயத்தையும் (ஆன்ம சக்தி) குறிப்பதாகும். இருதயநோய் உள்ளவர்கள் தாம் பிறந்த நட்சத்திரத்தின்று இக்கோவிலுக்கு வந்து நட்சத்திரவடிவ 27 எண்ணிக்கையில் அகல் விளக்கை எடுத்து ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுபவர்கள் தம் இருதயநோய் நீங்கி நலம் பெற்று செல்கின்றனர்.

இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும் .

அமைவிடம்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி – பட்டுக்கோட்டை வழித்தடத்தில் பாண்டி நிறுத்தத்தின் தெற்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கீழப்பெருமழை கிராமம்.

தொடர்புக்கு : சிவத்திரு ரகு அய்யா : 9750029412, 9487992753

கட்டுரை : கீழப்பெருமழை சி.இராம்பிரகாஷ்