கைதி திரை விமர்சனம்..!

[wp_ad_camp_2]

கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான “தேவ்” திரைப்படம் பெரிய தோல்வியை அடைந்து அவருக்கு சறுக்கலை ஏற்படுத்தியது. தற்போது கார்த்தியின் நடிப்பில் தீபாவளி ஸ்பெஷலாக விஜயின் பிகில் திரைப்படத்துடன் களத்தில் இறங்கிய திரைப்படம்தான் கைதி.

இப்படத்தில் ஹீரோயின், பாடல் என்று எதுவுமே இல்லாதது மிகப்பெரிய பலமாக இருந்தாலும் பி,சி சென்டர் ரசிகர்களை பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம்.

முதல் பாதி :

முதல் 15 நிமிடத்திற்கு போதை பொருட்களை எப்படி விநியோகம் செய்கிறார்கள் போதை பொருள் தயாரிக்கும் மாபியா பற்றிய கதைக்களமும் அவர்களிடம் மாட்டி கொள்ளும் போலீசின் நிலை பற்றி தெளிவாக காட்சி படுத்தியுள்ளார் இயக்குனர். முதல் 15 நிமிடத்திலேயே அனைத்து ரசிகர்களுக்கும் பதட்டத்தை ஏற்படுத்தும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து வெளியான கைதியாக கார்த்தி மாஸ் என்று கொடுக்கிறார். கதாநாயகனாக கார்த்தி இல்லாமல் கதைக்கு நாயகனாக வாழ்ந்திருக்கிறார். கார்த்தியின் முக பாவனைகள் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. கண்டிப்பாக மேக்கப் கலைஞரை பாராட்டலாம். அடுத்தடுத்து என்ன நடக்கும் கார்த்தி தனது குழந்தையை சந்திப்பாரா..? இல்லையா..? என்று ரசிகர்களை சீட்டின் நுனியில் இழுத்து செல்லும் அளவிற்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. போலீசாக வரும் நரேன் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். காமெடியன் தீனா படத்திற்கு பலம். அவரது காட்சிகள் போரடிக்காமல் இருக்கிறது.

கதை இரண்டு கோணத்தில் நகரும் ஒன்று கார்த்தி எப்படி போலீஸ் நிலையம் வந்தடைகிறார். மற்றொன்று போலீஸ் நிலையத்தில் மாட்டிக்கொள்ளும் மாணவர்கள் மற்றும் போலீசாக வரும் ஜார்ஜ் எப்படி அவர்களை வழி நடத்துகிறார் என்றும்.

முதல் பாதி ஒரு த்ரில்லர் மற்றும் திகில் படம் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது. முதல் பாதியே இப்படி என்றால் இரண்டாம் பாதி எப்படி இருக்கும் என்று அனைவரையும் புள்ளரிக்க வைக்கிறது. பின்னணி இசைதான் படத்தின் அசுர பலமே.

இரண்டாம் பாதி :

இரண்டாம் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும் அதை அனைத்தையும் மறக்கடிக்க வைத்து தனது வலிமையான திரைக்கதை மூலம் இயக்குனர் சிக்ஸர் அடித்துள்ளார். சண்டை காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம். இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து நாம் நினைத்து பார்க்காதது நடக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஸ்பை போலீசாக லாரிக்குள்ளேயே இருக்கும் போலீஸ் அசத்தியுள்ளார். கார்த்தி டூப் போடாமலே சண்டை காட்சிகளில் ஈடுபட்டது நேர்த்தியாக உள்ளது.

கிளைமாக்ஸ் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளும் விதமாக உள்ளது.

கார்த்தியின் மகளாக நடித்திருப்பவர் பாராட்டக்கூடிய வகையில் நடித்துள்ளார்.

படம் கார்த்தியை வேற லெவெலுக்கு கொண்டு செல்லும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மொத்தத்தில் கைதி தீபாவளிக்கு குடும்பத்துடன் பார்க்கவேண்டிய ஒரு மாஸ் த்ரில்லர் திரைப்படம்.

ரேட்டிங் : 3.25 / 5